சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் புள்ளி, ஹமா கூட மாற்றாமல் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு திருப்பி அனுப்புவோம் என சபாநாயகர் அப்பாவு அதிரடியாக கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது.
முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வாசித்தார்.
அதன்பிறகு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. முதல் ஆளாக தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார். அப்போது அவர் 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அதோடு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் நிறைவேற்றும் வகையில் கொண்டு வந்துள்ள 10 மசோதாக்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு அந்த 10 மசோதாக்களையும் அவர் ஒவ்வொன்றாக படித்தார். இந்த வேளையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டார். இந்த மசோதாக்களை தனித்தனியாக கூற வேண்டும். முதல்வர் கொண்டு வந்த மசோதாக்களுக்கு என ஒற்றை வார்த்தையில் முடித்து விடுங்கள் என்றார்.
அதை கேட்ட பிறகும் கூட தொடர்ந்து வேல் முருகன் பேசி கொண்டே இருந்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் போதுமா.. என கேட்டார். அதற்கு அவர், ”நான் இன்னும் பேசவே இல்லையே தலைவரே” எனக்கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ”முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மசோதா பற்றி கருத்து மட்டும் சொல்லுங்கள். ஏனென்றால் புல்ஸ்டாப், கமா மாற்றாமல் தான் மீண்டும் அனுப்ப உள்ளோம்” என்றார்.