சென்னை: முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும் அணி புதிதாக அறிமுகமாகிறது. இந்த அணியுடன் மொத்தம் 6 அணிகள் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இந்நிலையில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அந்த அணியின் பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன், கூறும்போது, ”உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் இது அடிக்கடி நடக்காது. இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளுமே சிறந்த ஃபார்மில் உள்ளன. ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர்கள்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை மேம்படுத்தும் என நம்புகிறேன். இந்திய அணி கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கருதப்படுகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவுக்கும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய திறன் உள்ளது” என்றார்.