சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையிலும், அதனபின்னர் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும் அவருக்கு புதன்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு இதயம் மற்றும் நெஞ்சகம் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அவர் ஓமந்தூரார் உயர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கான பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பான ரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.