சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தமிழக அரசு தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
ஆனால் அவற்றை ஆளுநர் பல நாட்களாக கிடப்பில் போட்டிருந்தார் என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அண்மையில் கூட கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போடக் கூடாது என உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாக்களை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என தமிழக அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை அதாவது வரும் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.