சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டை 4ஜி சிம் கார்டாக தரம் உயர்த்தி தருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள வசதியை வழங்குவதற்காக தற்போது 5ஜி இணைய சேவை வசதியை வழங்கி வருகின்றன. அடுத்தக் கட்டமாக, இன்னும் அதிவேக 6ஜி சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜிசேவை வழங்க மத்திய அரசு தற்போதுதான் அனுமதியளித்துள்ளது. ஆனால் இச்சேவை இன்னும்தொடங்கப்படாத நிலையில் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மைக்காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது. அதில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி இணைய சேவையை வழங்கஉள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பிஎஸ்என்எல் சிம்கார்டை கொண்டு வந்து 4ஜி சிம்கார்டாக தரம் உயர்த்திக் கொள்ளலாம். இதற்குஎவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னையில் இதுவரை 4ஜி சேவை தொடங்கவில்லை. இந்நிலையில், சிம் கார்டை தரம் உயர்த்தி என்ன பயன். இதனால், தற்போது கிடைத்து வரும் 3ஜி சேவை கூட கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் முதலில் 4ஜி சேவையை தொடங்க வேண்டும்.பிறகு சிம் கார்டை தரம் உயர்த்தவேண்டும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் கூறினர். இதுகுறித்து, பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்ட போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த மாதத்துக்குள் சென்னையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டுகளை தரம் உயர்த்தி வருகிறது. அவ்வாறு தரம் உயர்த்தப்படுவதால் தற்போது பயன்படுத்தி வரும் 3ஜி சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்றனர்.