சென்னை: தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.
கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் ரயில்வேதுறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும். 50 சதவீதம் சம்பளம் ரயில்வே நிர்வாகத்தால் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ரயில்வே அதிகாரிகளுடன், காவல்துறை ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.