சென்னை: மருத்துவமனைகளின் உணவகங்களில், உணவுகளை சுகாதாரமாக நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா, வடையை எலி சாப்பிடும் வீடியோவைரல் ஆனது. இதையடுத்து மருத்துவமனை டீன் பாலாஜி,உடனடியாக அந்த உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உட்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களில் சுகாதாரம் இல்லாமலும், கூடுதல் விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறை: இந்நிலையில், மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களில் மேற்கொள்ள வேண்டியசுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உணவகங்களை முறையாக தொடர்ந்து சுத்தம்செய்வதுடன், கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பூச்சிகள் மற்றும் விலங்குகள் எளிதில் அணுகாத வகையில், உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடை, கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும்.
விலங்குகள், பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளை,உணவு நிலைய வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. உணவு பொருட்களை நிலபரப்புக்கு மேல், சுவர்களில்இருந்து விலகி கண்ணாடி பெட்டிகளில் வைக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை உடனடியாக பராமரிப்பதுடன், பூச்சிகள், விலங்குகள் அணுகாதவாறு கட்டிடத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட விலை: அடைக்கப்பட்ட உணவுபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டும் வசூலிப்பதுடன், காலாவதி காலத்துக்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உணவுகளை கையாள்பவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன், தலைமுடி உதிராமல் இருக்க தலையுறை அணிய வேண்டும்.
உணவைக் கையாள்பவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான குடிநீரில் கழுவி கிருமிநீக்கம் செய்ய வேண்டும். புகைபிடித்தல், எச்சில் துப்புதல், மெல்லுதல், தும்மல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இடங்கள் உணவகத்தில் இருந்து தனியாகவும், பூச்சிகள் நெருங்காத அறைகளிலும் சேமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.