சென்னை: காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நீரிழிவு நோய் பரிசோதனை சிறப்பு முகாமை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். ‘நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை (வெல்னஸ் ஆன் தி வீல்ஸ்) சிறப்பு முகாம் டிஜிபி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நடமாடும் முகாம் வாகனத்தை டிஜிபி சங்கர் ஜிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் (தலைமையிடம்), வினித் தேவ் வான்கடே (நிர்வாகம்), நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த முகாம் குறித்து டிஜிபிதரப்பில் கூறும்போது, “சென்னையில் காவல் துறை, அவர்களின் குடும்பத்தினருக்காக நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் உயரம், எடை, பிஎம்ஐ, ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரைஅளவு, கண் உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
டிசம்பர் 1-ம் தேதி வரை: இதற்காக சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகளான மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, எழும்பூர், புதுப்பேட்டை, கொண்டித்தோப்பு, தண்டையார்பேட்டை, ராயபுரம், செம்பியம், அண்ணாநகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை நீரிழிவு நோய் நல முகாம்கள் நடைபெற உள்ளன. காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முகாம்களில் பங்கேற்று பயனடையலாம்” என்றனர்.