சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று காலைமுதல் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரிநல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேயர்பிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து அங்காளம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேறுவது, டெமல்லஸ் சாலையில் நீரேற்று நிலையத்தின் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதேபோல துணை மேயர் மகேஷ்குமார் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆதித்தனார் சாலை மற்றும் பாரதி சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழைக்கான நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், அடையாறு ஐந்து பர்லாங் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல் கழிவுகளை அகற்றும் பணிகளை சோதனையிட்டார்.
மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல் கனமழை பெய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த இடத்திலும் மழைநீர் தேங்கவில்லை. சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. முன்னெச் சரிக்கையாக அனைத்து சுரங்கப்பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும், அலர்ட் சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளன. பருவமழையையொட்டி 23 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கூடுதலாக வார்டுக்கு 10 பேர் என2 மாத காலத்துக்கு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.