சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ. 4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஆர். ஸ்ரீனிவாச நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கோலாலம்பூரில் இருந்து ஏ.கே 13 விமானத்தில் சென்னை வந்த ஆண் மலேசிய பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நவம்பர் 9-ஆம் தேதி தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது உடைமைகளுள், தரையில் துளையிடும், டிரில்லிங் இயந்திரம் ஒன்று இருந்தது. அதனுள் 3 தங்க உருளைக் கட்டிகள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் இருந்து 3.49 கிலோ எடை கொண்ட ரூ.1.88 கோடி மதிப்பிலான தூய்மையான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், நவம்பர் 11-ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் 3 எல் 141 இல் குவைத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னை வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்தனர். அவரது உடமைகளை சோதனையிட்டபோது, அவர் கொண்டு வந்திருந்த ரீசார்ஜ் செய்யக்கூடிய 3 எல்.இ.டி விளக்குகளில் 9 தங்கக் கட்டிகள், 3 தங்கத் தகடுகள் மற்றும் 3 தங்க வெட்டுத் துண்டுகள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.2.67 கோடி மதிப்புள்ள 4.93 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரு நபர்களிடமிருந்தும் சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் ரூ. 4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் ரூ.112 கோடி மதிப்பில் 200 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.