சென்னை: தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது.
தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதே சமயம் நேற்று காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது. அரசின் விதிப்படி, குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. குறிப்பாக, சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் – 150 என்ற அளவை தாண்டிச் சென்றது. சென்னையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். எனினும், ராயபுரம், அண்ணா சாலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக இருந்தது.
இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தல், 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தது, அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசுகள் வெடித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.