சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முக்கிய எச்சரிக்கையும், அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்..
இப்படித்தான், கடந்த செப்டம்பர் மாதமும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பரவியது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும், சாதாரண நாட்களை விட பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது.. இதில், புறநகர் பகுதிகளில் பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
குரோம்பேட்டை: இதில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கு மட்டும் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியானது. உடல்வலியுடன் காய்ச்சல் சுமார் 10 நாட்களுக்கு மேல் நீடித்ததாலேயே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்தது.
ஏற்கனவே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், புறநகர் பகுதியில் பரவும் காய்ச்சல் பாதிப்பானது, ஒருவித கலக்கத்தையும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியது.
சுகாதாரத்துறை: அதனால், சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும், குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும், குடிசை பகுதிகள் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்களை நடத்தி, காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
இதற்கு பிறகு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது.. சுகாதார அதிகாரிகள் நேரடியாகவே சென்று அந்த பகுதிகளில்லாம் ஆய்வுகளில் இறங்கினார்.. வீடுகளில் தண்ணீர் தேங்காத வகையில் இருக்க அறிவுறுத்தியதுடன், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள், சென்னையை தாக்காதவாறு தடுக்கப்பட்டது.
மருத்துவர்கள்: இந்நிலையில், மீண்டும் காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகமாக உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது..
அதைவிட முக்கியமாக, பொது மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் எண்ணிக்கை: சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறதாம். சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக தமிழ்நாட்டை பொறுத்தவரை, மே, ஜுன் மாதங்களில் டைபாய்டு பாதிப்பு அதிகமாக இருக்கும்… பிறகு செப்டம்பரில் இந்த தாக்கம் குறைந்து, டெங்கு போன்ற பிற வகையான காய்ச்சல் பரவும். ஆனால் இந்த வருடம் மழை பாதிப்பு பரவலாக இருப்பதால், டைஃபாய்டு காய்ச்சல் இப்போதே அதிகரித்து வருகிறதாம்.
இதுகுறித்து டாக்டர்கள் சொல்லும்போது, தரமற்ற குடிநீா், சுகாதாரமற்ற உணவு மூலமாக இந்த டைஃபாய்டு பரவுகிறது.. இந்த வகை பாக்டீரியாக்கள் குடல் பகுதியில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.. டைஃபாய்டு காய்ச்சலின் தீவிரத்தையடுத்து கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை கடுமையாக சேதமடைந்துவிடும்.
அட்வைஸ்: உடல் சோா்வு, கடுமையான காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், தொண்டை வலி, உடலில் தடிப்புகள், வயிற்று உபாதைகள் போன்றவை டைபாய்டின் அறிகுறிகளாகும்.
காய்ச்சல் பரவுவதை தடுக்க தனி நபா் சுகாதாரம் மிக முக்கியம்.. வெளி உணவுகளை கட்டாயம் தவிா்க்க வேண்டும்.. குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.. டைபாய்டு தடுப்பூசிகளை முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த 6 மாதங்களிலேயே டைபாய்டு தடுப்பூசி போடப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, இன்புளூயன்ஸா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கெள்ளவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.