Breaking News
Home / செய்திகள் / பாரதிதாசன் பல்கலை., மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

பாரதிதாசன் பல்கலை., மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் , தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்தத் தாமதத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச் சான்றிதழும் (Provisional Certificate) வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்ச்சி பெற்ற 1.5 லட்சம் மாணவர்களில் சில பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் – மே மாதங்களில் நடத்தப்பட்டு, ஜூன் மாதத் தொடக்கத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் பின் 6 மாதங்களாகியும் அவை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. அதைவிட வருத்தமளிக்கும் உண்மை, சான்றிதழ்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன; அவற்றை கல்லூரி நிர்வாகங்கள் தான் வழங்கவில்லை என்று பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வமும், தங்களுக்கு இன்னும் சான்றிதழ்களே வரவில்லை என்று கல்லூரி நிர்வாகங்களும் கூறி வருவது தான்.

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர்கல்வி கற்பதையும், மீதமுள்ளவர்கள் பணிக்கு செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால், உயர்கல்வி படிக்கவும், வேலைகளில் சேரவும் வாய்ப்பு கிடைத்தும் கூட தற்காலிக பட்டச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்களால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சிலரின் அலட்சியத்தால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாமதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கணடறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்காலிக பட்டச் சான்றிதழ் இல்லாமல், தனித்தனியான மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள், அடுத்த 6 மாதங்களில் தற்காலிக பட்டச் சான்றிதழை தாக்கல் செய்யாவிட்டால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளன. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பட்டப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *