சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரசாமி கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன் குற்ற வழக்குகளைக் கொண்டவர் முரளிகிருஷ்ணன் (39). இவர், கொத்தவால்சாவடி (C-5) காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதியப்பாதெரு – கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஶ்ரீ வீரபத்திரசாமி கோயிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர். இன்று (நவ.10) காலை 8.45 மணியளவில், முரளி கிருஷ்ணன் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு மேற்படி கோயிலுக்குள் சென்று, கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார். உடனடியாக, அவரை பிடித்த பொதுமக்கள், விசாரணைக்காக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முரளிகிருஷ்ணன் அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. மேலும், இச்சம்பவத்தில், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, முரளிகிருஷ்ணன் மீது வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.