சென்னை : சமூக வலைதளங்களில் அதிமுகவுக்காக தீவிரமாக களமாடும் தொண்டர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி ‘கிஃப்ட்’ கொடுக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த வழக்கம் நின்று போனது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, சில அமைச்சர்கள், பொங்கல் பண்டிகையின்போது, கட்சியின் கிளை செயலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தனர். அதிமுக ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நடைமுறையும் நின்றுவிட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் உடனான மோதலுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக, கழகத்தின் மூத்த தொண்டர்களுக்கு ரொக்கப் பணத்தோடு வேட்டி சேலை என பொங்கல் பரிசு கொடுத்தார். இந்நிலையில், இந்த தீபாவளியையொட்டி, சமூக வலைதளங்களில் தனக்காக தீவிரமாக களமாடும் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு அளிக்க உள்ளாராம்.
சமூக வலைதளங்களில் அதிமுகவின் சாதனைகளை பரப்பும் வகையிலும், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான நபர்களின் லிஸ்ட்டை எடுத்து, அவர்களுக்கு எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு போயுள்ளதாம். இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
அவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி தன் கையாலேயே தீபாவளி பரிசை வழங்கி, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இன்று தீபாவளி பரிசு பெறும் நபர்களில் பலர், அதிமுக ஐடி விங்கில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், அதிமுக ஆதரவாளர்களாக சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களாம்.
அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நான்கு மண்டலங்களாக பிரிந்திருந்த நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுக ஐடி விங் தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டார்.
அதிரடி காட்டும் எடப்பாடி.. அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிப்பு.. திலீப் கண்ணனுக்கு பொறுப்பு!
அதிமுக ஐ.டி விங் புதுப்பிக்கப்பட்ட பிறகு தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக கடுமையாக வேலை செய்து வருகிறது. அண்மையில், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், திமுக தரப்பு, எடப்பாடி பழனிசாமியை சீண்டிய நிலையில், அதற்கு அதே பாணியில் உடனடியாக ரியாக்ட் செய்து திரும்பிப் பார்க்க வைத்தது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி.
மேலும், அண்மையில் சட்டசபை கூட்டத்தொடரில் காவிரி பிரச்சனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதை திமுக ஐடி விங் ட்ரோல் மீம் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு அதிமுக ஐடி விங் அதே பாணியில் பதிலடி கொடுத்திருந்தது. திமுக ஐடி விங் 2.0 போலவே, அதிமுக ஐடி விங்கும் அதிரடி காட்டி வருகிறது. இந்தச் சூழலில் தான், சமூக வலைதளங்களில் அதிமுகவின் குரலை வலுப்படுத்தும் ஆதரவாளர்களுக்கு தீபாவளி பரிசு தருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்காக சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் சுமார் 200 பேருக்கு ரூ.5000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு வவுச்சர், கள செயல்வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஸ்டார் பெர்பாமர்ஸ் பேட்ச், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் வழங்கி பாராட்ட இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.