Breaking News
Home / செய்திகள் / நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் புத்தாடை வாங்க கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் புத்தாடை வாங்க கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களை கட்டியது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர். இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலை பார்க்க முடியாத நிலை இருந்தது. அந்த அளவுக்கு குளிர்ச்சியான கிளைமேட் நிலவியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர்.

இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை இன்று காலை முதல் களை கட்டி காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிரோட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை முதலே அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்த காட்சியை காண முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ெபாருட்களை வாங்கி சென்றனர். அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. மாலை நேரத்தில் இந்த கூட்டம் பல மடங்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இங்கு தங்கி தங்கள் மேல்படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

நாளை சனிக்கிழமை என்பதால் விடுமுறை ஆகும். இதனால், இன்று இரவு முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கானோர் திட்டமிட்டுள்ளனர். இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் இன்று காலை முதல் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதையதடுத்து சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டியில் பயணம் செய்த குவிந்தனர். பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் முந்தி அடித்து ஏறுவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதாவது இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பயணிகளை அதன் வழியாக வரிசையாக வரிசையாக செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்துறை சார்பில் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காவும் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. அதேபோல், இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றைய நிலவரத்தின்படி 2100 தினசரி பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதில் 1,36,700 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுவரை 2,23,613 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக சென்னையில் இருந்து 1,895 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு செல்ல 2,710 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பொதுமக்களின் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 18005991500 என்ற கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை எளிதில் நினைவில் வைத்து கொள்ள இயலவில்லை என பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ‘149’ என்ற எண்ணை போக்குவரத்து துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதே போல சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுவிட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. நாளை பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *