சென்னை: “தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.8) சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து இல்லாத தீபாவளி என்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதுக்குரிய நேரம், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விபத்துகள் நேராத வகையில் இந்த தீபாவளி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அனைவரும் கருதுகிறோம். அதையும் மீறி எங்கேயாவது தீ விபத்துகள் ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதேபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என்று 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீக்காய பிரிவு பழமை வாய்ந்த ஒன்றாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் இம்மருத்துவமனை சிறப்பு தீக்காய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 1973 ஆம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட சிறப்பு தீக்காய பிரிவு இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவுக்கே சிறந்த அடையாளமாக விளங்கி கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களும் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழகத்தினை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயன்பெற்று வருகிறார்கள். 24 மணி நேரமும் அறுவை அரங்குகள் தயார் நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையினையொட்டி 2020-ல் 15 பேர் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்திருக்கிறார். 2021-ஐ பொறுத்தவரை 30 பேர் பாதிக்கப்பட்டனர், இறப்பு எதுவும் இல்லை. 2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை 38 பேர் பாதிக்கப்பட்டு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி தீ விபத்தில் இறப்புகள் இல்லை என்ற நிலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
இன்று சிறப்பு தீக்காய பிரிவில் 20 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வெண்டிலேட்டர் கருவிகளுடன் ஆண்களுக்கான வார்டில் 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வார்டில் 8 படுக்கைகளும் உள்ளன” என்று அவர் கூறினார்.