சென்னை: “இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி அதேசமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் நுகர்வோர் சார்பில் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
2025 டிசம்பர் 31-க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென மத்திய அரசு நிர்பந்தப்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஒரு மீட்டருக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த மீட்டர்கள் முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும் வரை மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதற்கும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை பிரிபெய்டு அட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர், எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரரோ, அந்த நிறுவனத்திடம் இருந்து முன்பணம் செலுத்தி பிரிபெய்டு அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு இது வழிவகை செய்யும். இதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு இருப்பது போல, ஒவ்வொரு குடும்பங்களும் பீக் ஹவரில் பயன்படுத்தும் மின்சாரங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அபாயம் ஏற்படவுள்ளது.
தனியார் நிறுவனங்களிலும் பிரிபெய்டு அட்டைகள் பெறுவதன் மூலம் இப்போது பெறுகிற இலவச மின்சாரமோ, மானியங்களோ இல்லாத நிலை உருவாகும். தவிரவும், மின் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கூடுதல் கட்டணம் கொடுக்க முன்வருவோருக்கு முன்னுரிமை வழங்கி இதர மக்கள் பாதிக்கப்படும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டமே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டமாகும்.
மேலும், ஆரம்பத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் எல்லோரும் ஏற்றபின்பு ஸ்மார்ட் மீட்டரின் விலையை மின் நுகர்வோரிடம் மாதந்தோறும் வசூலிப்பதற்கான சூழ்ச்சியும் இதற்குள் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தவும், வீடுகளுக்கும், விவசாயத்துக்கும், விசைத்தறிக்கும் உள்ள இலவச மின் சலுகைகளை பறிப்பதற்கும் மொத்த மின்சார வாரியத்தை கலைத்து தனியார் வசம் மின் விநியோகத்தை ஒப்படைக்கும் நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்கவில்லையென்றால் அந்த நிதி உதவி கிடைக்காது என்றும், இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் மத்திய அரசு பயமுறுத்தி வருகிறது.மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களும் தொழில் அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த திட்டத்தில் உள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால், ஏற்படும் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டும் வகையில் பிற வழிகளில் நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளது.
எனவே, இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி அதே சமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரியத்துக்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு எந்த காரணம் கொண்டும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக மக்களைச் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் அபாயத்தை எடுத்துரைத்தும், இதனை கைவிட வலியுறுத்தியும் மக்களைத் திரட்டி அந்தந்த மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழக மக்களும், விவசாய பெருங்குடி மக்களும், நெசவாளர்களும், வணிகப் பெருமக்களும், குறு-சிறு நடுத்தர தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் பேராதரவளிக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.