சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.13-ம் தேதி விடுமுறை விடப்படுவதாகவும், அதனை ஈடுகட்ட நவ.18-ம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் நவ.12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் புத்தாடை, பட்டாசு என களை கட்டும். இந்நிலையில், தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றுவிடுவர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றிரவே புறப்பட்டு வருவது என்பது மிகுந்த சிரமமாக இருக்கும். குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலையில் உடனடியாக திரும்பி வருவதில் சிக்கல் உருவாகும். இதை கருத்தில் கொண்டு, மறுநாள் திங்கள்கிழமை நவ.13-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.
இந்த கோரிக்கைகள் அடிப்படையில், நவ.13-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை நவ. 12-ம் தேதி கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ.13-ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் நவ.18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.