சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அக்.22, 29 தேதிகளில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மனுக்களை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது “காவல்துறை ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு உரிய அனுமதி அளிக்காததால்தான் ஆர்எஸ்எஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்றம் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆண்டும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை வந்தது. அரசு கொடுக்கும் தடத்தில் அணி வகுப்பு நடக்கும் என ஆர்எஸ்எஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதில் என்ன சிக்கல் உள்ளது?” என நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு “ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களது பேரணி செல்லவிருக்கும் பாதை மற்றும் தேதிகளுக்கான பட்டியலை கொடுத்தால் நாங்கள் அதனை பரிசீலனை செய்து எது சரியானதாக வரும் என்பதற்கான உத்தரவை கொடுப்போம். மேலும் பேரணிக்கான பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த காலங்களில் பேரணிகளின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அதை மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. இது சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயம்” என தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, “நவ.19, 26 ஆகிய நாட்களில் ஒரு நாளில் அணிவகுப்புக்கு அனுமதியளிக்க வேண்டும்” என ஆர்எஸ்எஸ் தரப்பில் கேட்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அணிவகுப்பு தொடங்கும் இடம், முடிவடையும் இடம், வழித்தடம் போன்ற தகவல்களை நவ.9-ம் தேதிக்குள் அரசுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்க வேண்டும். அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நவ.15-ம் தேதிக்குள் உரிய அனுமதி உத்தரவுகளை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.