சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை டிச.16-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து ஆணையர் பேசியதாவது:
வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும். இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், டிச.16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, டிச.16-ம் தேதிக்குமேல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்