சென்னை: மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களால் நோயாளிகள் விரும்பிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய அமைப்பு ஆகும். தமிழகத்தில் 50 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 4 லட்சம் மருத்துவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் உள்ளன. இந்நிலையில், மருத்துவக் காப்பீட்டு நடைமுறைகளில் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐஆர்டிஏ) பரிந்துரைந்துள்ளது.
இந்த புதிய மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் சில இடர்பாடுகளும் உள்ளன. அதாவது, மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுபவர்களுக்கு 100 சதவீதமும் பணப் பரிவர்த்தனை ஏதுமில்லாமல் காப்பீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரும்பிய மருத்துவமனையில் பணம் செலுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டு, அந்த தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், எந்தெந்த மருத்துவமனைகள் 100 சதவீத பணப் பரிவர்த்தனையற்ற காப்பீடுத் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளதோ, அங்கு மட்டுமே சிகிச்சைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் நோயாளிகளுக்கு உள்ளது. நோயாளிகள் விரும்பிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என தீர்மானிப்பது நோயாளிகளின் உரிமை. அதனை இந்த புதிய திருத்தம் பறிக்கிறது. எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.