சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கொட்டும் மழையில், ‘நடப்போம்; நலம்பெறுவோம்’ எனும் நோக்கில் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி நடைபாதையை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னை பெசன்ட் நகரில்டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி, பெசன்ட் நகர் அவென்யூ சாலை, எலியட்ஸ் கடற்கரை வரை இப்பாதை காணப்படுகிறது. இங்கு பொதுமக்களின் வசதிக்கேற்ப, வாகனங்கள் நிறுத்தம், ஓய்வு இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தான். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.